நபிகளாரால் முற்படுத்தப்பட்டவர்

 


 நபிகளாரால் முற்படுத்தப்பட்டவர்


மக்களுக்குத் தலைமை தாங்கி தொழவைப்பது ஒரு சிறந்த அந்தஸ்தாகும். இதற்கு மார்க்கத்திலே சில தகுதிகள் சொல்லப்பட்டு இருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் அவர்கள் தான் மக்களுக்கு இமாமத் செய்து வந்தார்கள்.


அவர்கள் நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் கிடந்த போது தமக்குப் பதிலாக அபூபக்ர் இப்பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கூறினார்கள். வேறு யாரையாவது நியமிக்குமாறு மற்றவர்கள் எவ்வளவோ கூறிய போதும் அதை மறுத்து விட்டு அபூபக்ர் தான் இதை செய்ய வேண்டும் என்று உறுதியாகக் கூறிவிட்டார்கள்.


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: 


நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு சில நாட்களுக்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் வந்த போது பாங்கும் சொல்லப்பட்டது. அப்போது மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி அபூபக்ரிடம் கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அதற்கு அபூபக்ர் மென்மையான உள்ளமுடையவர். உங்களுடைய இடத்தில் நின்று தொழுகை நடத்த அவரால் முடியாது என்று சொல்லப்பட்டது. திரும்பவும் நபி (ஸல்) அவர்கள் முதலில் கூறியதையே கூறினார்கள்.


திரும்பவும் அவர்களுக்கு அதே பதிலே சொல்லப்பட்டது. மூன்றாவது முறையும் அவ்வாறே நடந்தது. அப்போது நீங்கள் நபி யூஸுபின் (அழகைக் கண்டு கையை அறுத்த) பெண்களைப் போன்று இருக்கிறீர்கள். மக்களுக்கு தொழுகை நடத்துமாறு அபூபக்ரிடம் சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் மீண்டும் கூறினார்கள். அபூபக்ர் (ரலி) வெளியே வந்து தொழுகை நடத்தினார்கள்.


நூல் : புகாரி-664 


தான் நோய்வாய்ப்பட்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை இமாமாகப் பின்தொடர்ந்து அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்து தொழுதுள்ளார்கள்.


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது: 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயினால் இறந்தார்களோ அந்த நோயின் போது அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து தொழுதார்கள்.


நூல் : திர்மிதீ-362 (330)


அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறுவதாவது: 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மரண நோய் ஏற்பட்ட போது சில முஸ்லிம்களுடன் நானும் அவர்களிடத்தில் இருந்தேன். தொழ வைப்பதற்கு வருமாறு நபி (ஸல்) அவர்களை பிலால் அழைத்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழ வைப்பவர் (ஒருவரை தொழவைக்குமாறு) கட்டளையிடுங்கள் என்று கூறினார்கள். எனவே நான் வெளியே சென்றேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் மக்களுடன் இருந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (அங்கு) இருக்கவில்லை.


நான் உமரே எழுந்து சென்று மக்களுக்குத் தொழ வையுங்கள் என்று கூறினேன். உமர் (ரலி) முன்னால் சென்று தக்பீர் சொன்னார்கள். அவர்கள் சப்தமிட்டு ஓதுபவராக இருந்தார்கள். அவர்களின் சப்தத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட போது அபூபக்ர் எங்கே? இதை அல்லாஹ்வும் முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.


இதை அல்லாஹ்வும் முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறினார்கள். (அபூபக்ர் (ரலி) அவர்களை அழைத்து வருமாறு) அவர்களிடத்தில் ஆளனுப்பினார்கள். உமர் (ரலி) அவர்கள் அந்தத் தொழுகையை தொழ வைத்த பிறகு அபூபக்ர் வந்தார். பின்பு அபூபக்ர் மக்களுக்குத் தொழ வைத்தார்.


நூல் : அபூதாவூத்-4660 (4041)


28) அடுத்த ஆட்சியாளராக அறிவிக்கப்பட்டவர்


நபி (ஸல்) அவர்கள் மரண வேளையில் இருக்கும் போதே அபூபக்ர் தான் அடுத்த ஆட்சித் தலைவர் என்று நபியவர்கள் தெளிவாகவும், மறைமுகமாகவும் அறிவித்துவிட்டார்கள்.


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தனது இறுதி நாட்களில்) நோயுற்றிருந்த போது உன் தந்தை (அபூபக்ர்) அவர்களையும் உன் சகோதரரையும் என்னிடம் அழைத்து வா. நான் மடல் ஒன்றை எழுதித் தருகிறேன். ஏனென்றால் (தாமே கலீஃபாவாக ஆக வேண்டுமென) எவரும் ஆசைப்படவோ நானே (அதற்குத்) தகுதியானவன் என்று யாரும் சொல்லிவிடவோ கூடும் என நான் அஞ்சுகிறேன்.


(ஆனாலும் அவ்வாறு வேறொருவர் முன்னிறுத்தப்பட்டாலும்) அபூபக்ரைத் தவிர வேறெவரையும் அல்லாஹ்வும் இறை நம்பிக்கையாளரும் மறுத்து விடுவர் என்று சொன்னார்கள்.



தாம் இல்லாத போது தமது பணியை அபூபக்ர் (ரலி) அவர்கள் செய்வார்கள் என்பதை ஒரு பெண்ணிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: 


நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மனி (தேவை ஒன்றை முறையிடுவதற்காக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்மனியைத் திரும்பவும் வரும்படி கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மனி நான் வந்து தங்களைக் காணமுடியவில்லையென்றால் ….? என்று நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்டால் (என்ன செய்வது) என்பது போல் கேட்டாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ என்னைக் காணவில்லையென்றால் அபூபக்ரிடம் செல் என்று பதில் சொன்னார்கள்.


நூல் : புகாரி-3659 


அபூபக்ர் (ரலி) அவர்கள் தான் தமக்குப் பின் ஆட்சிக்கு வருவார். அவர்களது ஆட்சி சொற்பக் காலத்தில் முடிவடைந்து விடும் என்பதை நபி (ஸல்) அவர்கள் தம் கணவில் காட்டப்பட்ட ஒரு சம்பவத்தின் மூலம் விளக்கினார்கள்.


அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுவதாவது: 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் (கனவில்) மக்களெல்லாரும் ஒரு பொட்டல் வெளியில் ஒன்று திரண்டிருக்கக் கண்டேன். அப்போது அபூபக்ர் எழுந்து (ஒரு கிணற்றிலிருந்து) ஒரு வாளி அல்லது இரண்டு வாளிகள் இறைத்தார். சிறிது நேரம் அவர் இறைத்தவுடன் சோர்வு தெரிந்தது.


அல்லாஹ் அவரை மன்னிப்பானாக, பிறகு அதை உமர் எடுத்துக் கொள்ள அது அவரின் கையில் பெரிய வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) அவரைப் போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக் கூடிய புத்திசாலியான (அபூர்வத்) தலைவர் ஒருவரையும் நான் கண்டதில்லை.


நூல் : புகாரி-3634 


29) சொல்வன்மையும் நெஞ்சுறுதியும்


சமுதாயத்தைத் தடம் புரள விடாமல் கட்டுக் கோப்புடன் கொண்டு செல்லும் நெஞ்சுறுதியும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டுவதற்குச் சிறந்த நாவன்மையும் பெற்றவர்களாக அபூபக்ர் (ரலி) திகழ்ந்தார்கள்.


நபித்தோழர்களுக்கு மத்தியில் ஆட்சித் தலைவரை தேர்வு செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சமுதாயம் பிளவுபடும் நிலை ஏற்பட்ட போது அவர்களது சொல் வன்மையின் காரணத்தினால் தான் சமுதாயத்தை அவர்கள் ஓரணியில் திரட்டினார்கள்.


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: 


உமர் (ரலி) அவர்கள் பேசப் போனார்கள். உடனே அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் மௌனமாக இருக்கச் சொல்லி விட்டார்கள். ( இதைப் பிற்காலத்தில் நினைவு கூறும் போது) உமர் அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக நான் பேச முயன்றது எதற்காக என்றால் நான் எனக்குப் பிடித்த பேச்சு ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தேன்.


அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த அளவிற்குப் பேச மாட்டார்கள் என்று நான் அஞ்சினேன். அதனால் தான் நான் பேச முயன்றேன் என்று கூறி வந்தார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசினார்கள். மக்களிலேயே உறை நயமிக்கவர்களாக அவர்கள் பேசினார்கள்.


நூல் : புகாரி-3668 


இது மட்டுமல்லாமல் நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு நபி (ஸல்) அவர்கள் இன்னும் மரணிக்கவில்லை என்றக் கருத்தில் உமர் (ரலி) அவர்கள் உட்பட பலர் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கும் கட்டாயம் மரணம் ஏற்படும் என்று கூறும் குர்ஆன் வசனம் அப்போது எவருடைய சிந்தனைக்கும் வரவில்லை.


ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆதாரங்களைக் குர்ஆனில் இருந்து எடுத்துக் காட்டி நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட சமுதாயத்தையும், கொள்கையையும் பாதுகாத்தார்கள்.


நபி (ஸல்) அவர்களின் துணைவியரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது: 


(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் ஸ‚ன்ஹ் என்னும் இடத்தில் இருந்து கொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பெய்தினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் எழுந்து அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித் தான் நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்று தான் தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி (ஸல்) அவர்கள் இறந்து வி


ட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள் என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (அங்கே) வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு தங்களுக்கு என் தந்தையும் தாயும் அற்பணமாகட்டும். நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள்.


என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவனின் மீது ஆணையாக அல்லாஹ் ஒரு போதும் இரண்டு மரணங்களை உங்களுக்குச் சுவைக்கச் செய்ய மாட்டான் என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள். (வெளியே வந்த பிறகு உமர் (ரலி) அவர்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லையென்று) சத்தியம் செய்பவரே நிதானமாயிருங்கள் என்று சொன்னார்கள்.


அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசிய போது உமர் (ரலி) அவர்கள் அமர்ந்து கொண்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றிவிட்டு எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும்.


அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் அல்லாஹ் (என்றும்) உயிராயிருப்பவன். அவன் இறக்க மாட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள். மேலும் நபியே நீங்களும் இறக்கவிருப்பவர் தாம். அவர்களும் இறக்க விருப்பவர்களே என்னும் (39 : 30) என்ற இறை வசனத்தையும் முஹம்மது ஒரு இறைத் தூதரே அன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் கூட பல இறைத் தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். எனவே அவர் இறந்து விட்டாலோ அல்லது (போரில்) கொல்லப்பட்டு விட்டாலோ நீங்கள் உங்கள் கால்சுவடுகளின் வழியே (பழைய மார்க்கத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா?


(நினைவிருக்கட்டும்) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கிறானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதிபலனை மிக விரைவில் வழங்குவான் என்னும் (3 : 144) இறைவசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டை அடைக்க) விம்மி அழுதார்கள்.


நூல் : புகாரி-3667 , 3668


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது: 


அல்லாஹ்வின் மீதாணையாக அபூபக்ர் (ரலி) இவ்வசனத்தை அங்கும் ஓதிக் காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போலவும் அபூபக்ர் (ரலி) அவர்கள் மூலமாகத் தான் இதை அவர்கள் அறிந்து கொண்டதைப் போலவும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக் கொண்டிருந்தார்கள்.


நூல் : புகாரி-1242 


Comments