குடிமக்கள் அபூபக்ர் (ரலி)க்கு அளித்த பட்டம்
அபூபக்ர் (ரலி) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் எவரும் அவர்களைப் பற்றி தவறாக குறிப்பிட்டதே இல்லை. மாறாக அவர்கள் மக்களில் எல்லாம் சிறந்தவர் என்று தான் மக்கள் அவர்களுக்கு பட்டம் கொடுத்தார்கள். அவர்களுக்கு நிகராக யாரும் அக்காலத்தில் இல்லை என்று அவர்கள் காலத்தவர்களால் சான்றைப் பெறுகின்ற அளவிற்கு அப்பழுக்கற்ற வாழ்க்கை வாழ்ந்துச் சென்றார்கள்.
முஹம்மத் பின் ஹனஃபிய்யா (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:
நான் என் தந்தை (அலீ (ரலி) அவர்கள்) இடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு மக்களில் யார் சிறந்தவர் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அபூபக்ர் அவர்கள் என்று பதிலளித்தார்கள். நான் பிறகு யார்? என்று கேட்டேன். பிறகு உமர் அவர்கள் (மக்களில் சிறந்தவர்) என்று பதிலளித்தார்கள்.
நூல் : புகாரி-3671
அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பிறகு மூன்றாவது ஆட்சித் தலைவராக வந்த உமர் (ரலி) அவர்கள் தம்மை விட அபூபக்ர் தாம் உயர்ந்தவர் என்று கூறியுள்ளார்கள்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்களிடம் நீங்கள் உங்களுக்குப் பின் யாரையாவது உங்கள் பிரதிநிதியாக நியமிக்கக் கூடாதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் நான் எவரையேனும் எனக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அது தவறாகாது) ஏனென்றால் (எனக்கு முன்பு) என்னை விடச் சிறந்தவரான அபூபக்ர் (ரலி) அவர்கள் அவ்வாறு ஆட்சித் தலைவரை (என்னை) நியமித்துச் சென்றிருக்கிறார்கள்.
(எவரையும் தலைவராக நியமிக்காமல்) அப்படியே நான் விட்டு விட்டாலும் (அதுவும் தவறாகாகது.) ஏனென்றால் என்னை விடச் சிறந்தவர்களான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விதம் (யாரையும் நியமிக்காமல்) விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி-7218
நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்குத் தான் சிறப்பில் முதலிடத்தை கொடுத்தார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே நாங்கள் (சிறப்பில் முதவாவது) அபூபக்ர். அடுத்து உமர் அடுத்து உஸ்மான் என்று கூறிக் கொண்டிருந்தோம்.
நூல் : திர்மிதீ-3707 (3640)
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களுக்குச் சமமாக எவரையும் கருதுவதில்லை. பிறகு உமர் (ரலி) அவர்களையும் அவர்களுக்குப் பிறகு உஸ்மான் (ரலி) அவர்களையும் (சிறந்தவர்களாகக் கருதி வந்தோம்.) பிறகு (மீதமுள்ள) நபி (ஸல்) அவர்களின் தோழர்களிடையே ஏற்றத் தாழ்வு பாராட்டாமல் விட்டு விட்டோம்.
நூல் : புகாரி-3698
41) அபூபக்ர் (ரலி) அவர்களும் மனிதரே
அபூபக்ர் (ரலி) அவர்களின் வாழ்க்கையை தமிழில் தொகுத்த சிலர் அபூபக்ர் (ரலி) அவர்கள் கனவிற்கு விளக்கம் கொடுத்தால் அவ்விளக்கம் அணு அளவு கூட பிசகாது என்று எழுதுகிறார்கள். நபித்தோழர்களின் விளக்கத்தை அவசியம் பின்பற்ற வேண்டும் என்றும் பலர் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
இவ்விரு சாராரின் கருத்தும் தவறானதாகும். ஏனென்றால் அபூபக்ர் (ரலி) அவர்களும் மனிதர் தான். அவர்களின் விளக்கத்திலும் தவறுகள் ஏற்படத் தான் செய்யும் என்பதே உண்மை. இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவாக உணர்த்துகிறது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அந்த மேகத்திலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தன. உடனே மக்கள் தங்கள் கைகளை நீட்டி அவற்றைப் பிடித்துக் கொண்டிருக்கக் கண்டேன். (அவர்களில்) அதிகம் பிடித்தவர்களும் உண்டு. குறைவாகப் பிடித்தவர்களும் உண்டு.
அப்போது ஒரு கயிறு பூமியிலிருந்து வானம் வரைப் போய்ச் சேர்ந்தது. அப்போது (அல்லாஹ்வின் தூதரே) நீங்கள் அந்தக் கயிற்றைப் பற்றிக் கொண்டு மேலே சென்று விடக் கண்டேன். பிறகு மற்றொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அவரும் மேலே சென்றுவிட்டார். பிறகு (மூன்றாவதாக) மற்றொரு மனிதரும் அதைப் பற்றிக் கொண்டு அதனுடன் மேலே சென்று விட்டார்.
பிறகு (நான்காவதாக) இன்னொரு மனிதர் (வந்து) அதைப் பற்றிக்கொள்ள அந்தக் கயிறு அறுந்து (விழுந்து)விட்டது. பிறகு (மீண்டும்) அக்கயிறு (வானத்துடன்) இணைக்கப்பட்டது என்று சொன்னார். அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த மேகம் தான் இஸ்லாமாகும். சொட்டிக் கொண்டிருந்த தேனும் நெய்யும் குர்ஆனாகும். அதன் இனிமை சொட்டிக் கொண்டிருக்கிறது. குர்ஆனிலிருந்து அதிகம் பெற்றவர்களும் உள்ளனர். குறைவாகப் பெற்றவர்களும் உள்ளனர்.
வானிலிருந்து பூமிவரை நீண்டு செல்லும் அந்தக் கயிறானது நீங்கள் இருந்து வருகின்ற சத்திய (மார்க்க)மாகும். அதை நீங்கள் பற்றுகிறீர்கள். அல்லாஹ் உங்களை (வானளவிற்கு) உயர்த்தி விடுகிறான். பிறகு உங்களுக்குப் பின்னால் இன்னொரு மனிதர் அதைப் பற்றுகிறார். அதன் மூலம் அவரும் உயர்ந்து விடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக்கொண்டு அதன் மூலம் உயர்ந்து விடுகிறார்.
அதை (நான்காவதாக) மற்றொருவர் பற்றுகிறார். (ஆனால்) அது அவரோடு அறுந்து விடுகிறது. பின்னர் அவருக்காக அக்கயிறு இணைக்கப்படுகிறது. அதன் மூலம் அவரும் உயர்ந்து விடுகிறார் என்று கூறிவிட்டு அல்லாஹ்வின் தூதரே என் தந்தை தங்களுக்கு அற்பணமாகட்டும். (நான் சொன்ன விளக்கம்) சரியா? தவறா? என்று கேட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் சிலவற்றைச் சரியாக சொல்லி விட்டீர்கள். சிலவற்றைத் தவறாகச் சொல்லி விட்டீர்கள் என்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் தவறாகக் கூறியதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்க வேண்டும் என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் (இனி) சத்தியம் செய்து கேட்காதீர்கள் (நான் சொல்லப் போவதில்லை) என்றார்கள்.
நூல் : புகாரி-7046
அபூபக்ர் (ரலி) அவர்கள் நம்மையெல்லாம் விட சிறந்தவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஒருவரை மதிப்பது என்பது வேறு. மார்க்க விஷயத்தில் பின்பற்றுவது என்பது வேறு. நபித்தோழர்களில் யாருக்கும் வஹீ வரவில்லை. நபி (ஸல்) அவர்களுடன் இம்மார்க்கம் பூர்த்தி செய்யப்பட்டு விட்டது.
எனவே இதிலே யாரும் எதுவும் சேர்க்க முடியாது. நபித்தோழர்களிடத்திலும் தவறுகள் ஏற்பட்டிருக்கிறது. இது போன்ற காரணங்களால் நாம் மார்க்க சட்டதிட்டங்களில் நபித்தோழர்களைப் பின்பற்றக் கூடாது. அதே நேரத்தில் அவர்களை நேசிப்பதிலும் மதிப்பதிலும் குறைவு வைத்துவிடக் கூடாது.
42) அபூபக்ர் (ரலி) சம்மந்தமான பலவீனமான செய்திகள்
அபூபக்ர் (ரலி) அவர்களைச் சிறப்பித்துக் கூறும் விதத்தில் பலவீனமான செய்திகள் ஏராளமாக உள்ளது. பின்வரும் பலவீனமான செய்திகள் மக்களுக்கு மத்தியில் பிரபலியமாக இருப்பதால் இவற்றை பற்றிய விபரத்தை மட்டும் பார்ப்போம்.
உமர் (ரலி) அவர்கள் கூறுவதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தர்மம் செய்யுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அந்நேரத்தில் என்னிடத்தில் இதற்குத் தோதுவாக செல்வம் இருந்தது. ஒரு நாளும் அபூபக்ரை (நன்மையில்) நான் முந்தியதில்லை. எனவே நான் இன்று அபூபக்ரை (தர்மம் செய்வதில்) முந்தி விடுவேன் என்று (மனதில்) கூறிக் கொண்டேன். எனது செல்வத்தில் பாதியை (நபி (ஸல்) அவர்களிடத்தில்) நான் கொண்டு வந்தேன்.
உமது குடும்பத்தாருக்காக நீங்கள் என்ன வைத்து விட்டு வந்தீர்கள்? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் இது போன்று (பாதியை வைத்துவிட்டு வந்துள்ளேன்) என்று கூறினேன். அபூபக்ர் தம்னிடம் உள்ள அனைத்தையும் கொண்டு வந்தார். நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரே உமது குடும்பத்தாருக்காக நீங்கள் என்ன வைத்துவிட்டு வந்தீர்கள்? என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள் நான் அவர்களுக்காக அல்லாஹ்வையும் அவனது தூதரையும் வைத்துவிட்டு வந்தேன் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக ஒரு போதும் அபூபக்ரை எந்த (நன்மையான) விஷயத்திலும் என்னால் முந்தவே முடியாது என்று நான் கூறிக் கொண்டேன்.
நூல்: திர்மிதீ-3675 (3608)
இந்த செய்தியில் ஹிஷாம் பின் சஃத் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று யஹ்யா பின் முயீன் அபூஹாதம் மற்றும் நஸயீ ஆகிய இமாம்கள் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள்.
இதே செய்தி முஸ்னத் பஸ்ஸாரில் இஸ்ஹாக் பின் முஹம்மத் என்பவரின் வழியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரும் பலவீனமானவர் என்று இமாம் தாரகுத்னீ மற்றும் இமாம் நஸயீ ஆகியோர் கூறியுள்ளார்கள்.
இந்தச் சமுதாய மக்களின் ஈமானுடன் அபூபக்ரின் ஈமான் (தராசில்) வைக்கப்பட்டால் அபூபக்ரின் ஈமானே மிகைத்து நிற்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சிலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தச் செய்தியை ரவ்வாத் பின் ஜர்ராஹ் என்பவர் அறிவிக்கிறார். இவர் மூளை குழம்பியவர் என்று இமாம் புகாரி அபூஹாதம் மற்றும் நஸயீ ஆகியோர் கூறியுள்ளனர். இவர் விடப்பட வேண்டியவர் என்று இமாம் தாரக்குத்னீ கூறியுள்ளார். எனவே இச்செய்தி பலவீனமானது.
நபி (ஸல்) அவர்களுடன் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஸவ்ர் குகைக்குள் நுழைந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் குகைக்குள் இருந்த எல்லா ஓட்டைகளையும் அடைத்துவிட்டு மீதமிருந்த ஒரு ஓட்டையை தம் காலால் அடைத்துக் கொண்டார்கள். அப்போது ஒரு பாம்பு அவர்களைக் கொட்டியது. தம் மடியில் உறங்கிக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களை எழுப்ப மனமில்லாமல் அபூபக்ர் (ரலி) அவர்கள் வேதனையைத் தாங்கிக் கொண்டார்கள்.
பின்பு நபி (ஸல்) அவர்கள் தம் எச்சிலை பாம்பு கடித்த இடத்தில் தடவி விஷத்தை எடுத்தார்கள் என்று ஒரு சம்பவம் கூறப்படுகிறது. இந்நிகழ்விற்குரிய எந்த அறிவிப்பாளர் தொடரையும் நாம் காணவில்லை. இச்செய்தியில் தவறுகள் இருப்பதாக இமாம் இப்னு கஸீர் அவர்கள் தனது பிதாயதுன் நிஹாயா எனும் வரலாற்று நூலில் கூறியுள்ளார். எனவே இது சரியான தகவல் அல்ல.
இருவரும் குகைக்குள் நுழைந்த பிறகு குகைக்கு வெளியே சிலந்தி ஒன்று வலை பின்னியதால் குகைக்குள் நபி (ஸல்) அவர்கள் சென்றிருக்க முடியாது என்று கருதி எதிரிகள் குகைக்குள் நுழையாமல் சென்று விட்டார்கள் என்ற தகவலும் பரவலாக மக்களுக்கு மத்தியில் பேசப்படுகிறது.
இச்செய்தி முஸ்னத் அஹ்மதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் உஸ்மான் பின் ஸஃபர் என்பவர் இடம்பெறுகிறார். இவர் யார் என்று அறியப்படவில்லை என இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே இதுவும் பலவீனமான செய்தியாகும்.
முற்றும்.அல்ஹம்துலில்லாஹ் !
இன்ஷாஅல்லாஹ் அடுத்து உமர் பாரூக் ரலி அவர்களின் வரலாறு பார்ப்போம்.
Comments
Post a Comment