09) நற்காரியங்களை அதிகமாக செய்தவர்
ஏகத்துவக் கொள்கையை ஏற்றதை மாத்திரம் தாங்கள் செய்த பெரும் நன்மையாகக் கருதிக் கொண்டு இன்ன பிற நன்மையானக் காரியங்களில் ஆர்வம் காட்டாதவர்களை அதிகமாக சமுதாயத்தில் காணுகிறோம். இஸ்லாம் கற்றுத் தந்த அனைத்து விதமான நற்காரியங்களும் அபூபக்ர் (ரலி) அவர்களிடத்தில் நிரம்பியிருந்தது.
அபூஹ‚ரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து அல்லாஹ்வின் அடியாரே இது (பெரும்) நன்மையாகும். (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்) என்று அழைக்கப்படுவார். (தமது உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்.
அறப்போர் புரிந்தவர்கள் ஜிஹாத் என்னும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். நோன்பாளியாக இருந்தவர்கள் ரய்யான் என்னும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். தர்மம் செய்தவர் சதகா என்னும் வாசல் வழியாக அழைக்கப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே என் தாயும் தந்தையும் தங்களுக்கு அற்பணமாகட்டும். இந்த வாசல்கள் அனைத்திலிருந்து அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துன்பமும் இல்லையே எனவே அனைத்து வாசல்கள் வழியாகவும் ஒருவர் அழைக்கப்படுவாரா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம். நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்கள்.
நூல் : புகாரி-1897
அபூகதாதா (ரலி) அவர்கள் கூறுவதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு இரவில் வெளியில் வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் சப்தத்தை தாழ்த்தி தொழுது கொண்டிருப்பதைக் கண்டார்கள். உமர் (ரலி) அவர்கள் தம் சப்தத்தை உயர்த்தி தொழுதுகொண்டிருந்த நிலையில் அவர்களை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள்.
அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களிடம் சேர்ந்து இருந்த போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரே உனது சப்தத்தை தாழ்த்தியவராக நீர் தொழுதுகொண்டிருந்த போது நான் உங்களைக் கடந்து சென்றேன் என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்கு அருகில் இருப்பவர்களுக்கு (என் ஓதுதலை) நான் கேட்கச் செய்து விட்டேன் அல்லாஹ்வின் தூதரே என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடத்தில் நீர் சப்தத்தை உயர்த்திய நிலையில் தொழுது கொண்டிருக்கும் போது உங்களை நான் கடந்து சென்றேன் என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே நான் உறங்குபவர்களை விழிக்கச் செய்கிறேன். ஷைத்தான்களை விரட்டுகிறேன் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் (அபூபக்ரிடம்) அபூக்ரே உமது சப்தத்தை கொஞ்சம் உயர்த்துங்கள் என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்களிடம் உமரே உமது சப்தத்தை கொஞ்சம் தாழ்த்துங்கள் என்று கூறினார்கள்.
நூல்: அபூதாவூத்-1329 (1133)
Comments
Post a Comment