அறிமுகம்
அப்ரஹா என்ற மன்னன் யானைப் படைகளுடன் காஃபாவை இடிக்க வந்த போது அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட சின்னஞ்சிறு பறவைகள் அவனது படையின் மீது நெருப்பு மழையைப் பொழிந்ததால் தன் படையுடன் அவன் அழிக்கப்பட்டான். இந்த சம்பவம் நிகழ்ந்த வருடம் யானை வருடம் என்று அழைக்கப்படுகிறது.
இந்நிகழ்வு நடந்து இரண்டரை வருடம் கழித்து அபூகுஹாஃபா என்ற உஸ்மானுக்கும் சல்மா என்ற உம்முல் கைர் என்பவருக்கும் மகனாக அபூபகர் (ரலி) அவர்கள் மக்காவில் பிறந்தார்கள். அபூபக்ர் என்பது அவர்களின் புனைப் பெயராகும். இவர்களுக்கு பெற்றோர் வைத்த பெயர் அப்துல்லாஹ்.
நூல் : அல்இஸாபா பாகம் : 2 பக்கம் : 1088
நபி (ஸல்) அவர்கள் இறைச் செய்தியை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் போது வேறு எவரும் உண்மைப்படுத்தாத அளவிற்கு நபி (ஸல்) அவர்களை அதிகம் உண்மைப்படுத்தியதால் சித்தீக் (அதிகம் உண்மைப்படுத்துபவர்) என்ற பெயரும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜெருசலத்தில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு (இரவில்) கொண்டு சொல்லப்பட்ட போது அதிகாலையில் இதைப் பற்றி மக்கள் (ஆச்சரியமாகப்) பேசிக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களை நம்பி உண்மைப்படுத்திய சிலர் (கொள்கையை விட்டும்) தடம் புரண்டார்கள்.
சில இணைவைப்பாளர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று இன்று இரவு பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக உமது தோழர் (முஹம்மது) கூறிக் கொண்டிருக்கிறாரே அதைப் பற்றி நீர் என்ன நினைகிறீர்? என்று கேட்டார்கள்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் இவ்வாறு அவர் (முஹம்மத்) கூறினாரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் ஆம் என்றவுடன் முஹம்மத் இதை சொல்லியிருந்தால் திட்டமாக அவர் உண்மை தான் சொன்னார் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இன்று இரவு பைத்துல் முகத்தஸிற்குச் சென்று பகல் வருவதற்கு முன்பே அவர் திரும்பினார் என்பதையா உண்மை என்று நீர் நினைக்கிறீர்? என்று இணை வைப்பாளர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் இதை விட பாரதூரமான விஷயங்களில் எல்லாம் அவரை உண்மையாளர் என்று நான் கருதிக் கொண்டிருக்கிறேன்.
வானத்திலிருந்து காலையிலும் மாலையிலும் (இறைச்) செய்தி (வருவதாக முஹம்மத் கூறுவதையும்) உண்மை என்று நான் நம்புகிறேன் என்று கூறினார். எனவே தான் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அஸ்ஸித்தீக் (அதிகம் உண்மைப்படுத்துபவர்) என்ற பெயர் இடப்பட்டது.
நூல் : ஹாகிம்-4407 , பாகம் : 10 பக்கம் : 250
அனஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது :
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் உமர் உஸ்மான் ஆகியோரும் உஹுது மலையின் மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி (ஸல்) அவர்கள் உஹுதே அசையாமல் இரு. ஏனெனில் உன் மீது ஓர் இறைத் தூதரும் (நானும்) ஒரு சித்தீக்கும் இரு உயிர்த் தியாகிகளும் உள்ளனர் என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி-3675
அபூபக்ர் (ரலி) அவர்கள் வயதில் மூத்தவராகவும் பல இடங்களுக்குச் சென்று வியாபாரம் செய்பவராகவும் இருந்தார்கள். எனவே மக்களுக்கு மத்தியில் அவர்கள் நன்கு அறிமுகமாகியிருந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்கள் பின் தொடர மதீனா நோக்கி (ஹிஜ்ரத்) சென்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் மூத்தவராகவும், அறிமுகமானவராகவும் இருந்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இளையவராகவும், அறிமுகமற்றவராகவும் இருந்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி-3911
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வருகை புரிந்தார்கள். அப்போது அவர்கள் தம் தோழர்களில் அபூபக்ர் (ரலி) அவர்கள் மட்டுமே கருப்பு வெள்ளை முடியுடையவர்களாக இருந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தான் நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் அதிக வயதுடையவராகவும் இருந்தார்கள்.
நூல் : புகாரி-3919 , 3920 ,
மாமனிதர் நபி (ஸல்) அவர்கள் தரும் சாட்சியத்தை விட நம்பத்தகுந்த சிறந்த சாட்சி வேறு எதுவும் இருக்க முடியாது. அபூபக்ர் (ரலி) அவர்கள் நல்ல மனிதர் என்று நபி (ஸல்) அவர்கள் நற்சான்றளித்தார்கள்.
அபூஹூரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அபூபக்ர் சிறந்த மனிதராவார்.
நூல் : திர்மிதீ-3795 (3728)
Comments
Post a Comment